Saturday, October 17, 2015

ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடாத்திய  சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு பெற்ற  சிறுகதை

பட்டாம் பூச்சி [ சிறுகதை ] 



அப்பா  ....''அம்மா எங்கப்பா  '' ?.  ''அம்மா எங்கப்பா ''?.  .....தலையை இரு கைகளாலும் சொறிந்த  படி மழைத் தண்ணீயில் நனைந்தவளாக   இடை விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள்  இசையாள் .
''உனக்கு  எத்தினை தரம் சொல்றது   அம்மா கடவுளிட்ட போயிட்டா எண்டு ''....தண்ணீக்க நிக்காமல் உள்ள போ ...போ ... அவளுக்கு  என்ன  ?  நின்மதியாய் போய்ச் சேர்ந்திட்டாள் .  நான் தனியக் கிடந்தது சீரழியிரன் . 
  ''மழையில நனையாமல் முதலில உள்ள போ .''..கோபம்  தாங்க முடியாமல் அவளை விரட்டி உள்ளே அனுப்பினான் , கொட்டும் மழையின் வெள்ளம் உள்ள வரவிடாமல்   ஆணை
போட்டுக் கொண்டு இருந்த  ராகவன் தன் காலைப்  பார்ப்பதும் , சரி செய்வதும் என்று கீழ்
மூச்சு  , மேல்  மூச்சு வாங்க  நனைந்து நனைந்து வெள்ளத்துக்கு அணை போட்டுக்கொண்டு . இருந்தான்.ஓலையில் இருந்து வடியும் தண்ணி ஒழுக்குகளில்  விளையாடிக்கொண்டு இருந்தாள் இசை .
'' தொப்புத்   தொப்பு  ''என்று விழும் தண்ணிக்கு பொத்தான் வைத்தாள்  மீனாட்சி .
இசை   நனையாதை  சளி பிடிச்சு காச்சலாக்கி போடும்  . பிறகு நான்ஆஸ்பத்திரிக்கு கொண்டு திரிய ஏலாது சொல்லிட்டன். உன்னை வைச்சு என்ன செய்யப் போறேனோ ஆண்டவனுக்கு தான் தெரியும் .புறு புறுத் கொட்டினான் ராகவன் . மழையில் நனைந்து  தோய்ந்தவனின் தலையை துடைத்து கோப்பி   கொடுத்தாள் மீனாட்சி.
''அப்பம்மா  . ... எனக்கு''?
''ம்ம்.....    மழையில  விளையாடி களைச்சுப் போய் இருக்கிறா குடுங்கோ ..... அவாவுக்கு குடுங்கோ..''
விளையாடுற நேரத்துக்கு  இரண்டு வாய்ப்பாடுபாடமாக்கிஇருக்கலாம்அடுத்தவருஷம் பள்ளிக் கூடம் போகேக்க தெரியும் .
அவளை  சும்மா விடு . படிக்கிற பிள்ளை படிக்கும் . இன்னும் பள்ளிக்கூடமே சேர்க்க  ஒருவருஷம் இருக்கு இப்ப  என்ன அசவசரம் ? 
நாங்கள் தான் ஒண்டும் ஒழுங்காப் படிக்கேல  ..அதுக்கு தான் சொல்றன் .......
''சரி சரி விடு...''
ஆஅ..... அ ...ம் ..மா ....என்ற படி காலை    தூக்கினான் ராகவன் . 
அப்பம்மா  ......''அப்பாவுக்கு நீங்களா அம்மா?''...
 '' அப்ப ..... எண்ட  அம்மா எங்க   '' ?........
.''.நானும் அம்மாட்ட கடவுளுட்ட போகட்டா? ''
 ''இசை .............இங்க வா .. '' அதெல்லாம் அப்பம்மாக்கு தெரியாது பேசாமல் போயிரு ..
அம்மா  கொஞ்சம் இளம் சுடுதண்ணி  தாங்கோ .....கால் வலிக்கிது
தெரிஞ்சும் தெரிஞ்சும் ....நீ போய் தண்ணியில நிண்டால் சரியே ?
பின்ன என்னம்மா ?. நாங்கள் குளிருக்க  நனைஞ்சு கிடந்தாலும் பரவாயில்லை பிள்ளையை என்ன செய்றது .?.
இதுக்கு தான்  ஆயிரம் தடவை  கெஞ்சிட்டன் அவள் பவித்திராவை கட்டு எண்டு . அவளைக்கட்டினால் மாமாவுக்கும் நின்மதி . உன்னை விட அவள் வயசும் குறைவு தானே . இந்த நேரத்தில தானே அவளுக்கும் சரி உனக்கும் சரி  மனசுக்கு ஆறுதலும்  நின்மதியும் கிடைக்கும் மாமா அவுஸ்திரேலியா அனுப்புறதை விட அவள் இங்கஇருந்திட்டால் அவரிண்ட கடைசி காலமும் சந்தோசமாய் ஆத்மாசாந்தி அடையும். ம்ம்ம்ம்ம்ம்ம்  என்ன செய்வம் எல்லாம் விதி தான் .

நாங்கள் என்ன பாவம் செய்தம் ?. நானும்  அப்பாவை இழந்தன் , நீ உன்ர  பெண்சாதியை  இழந்தாய் , பவி புருசனையும் தாயையும்  இழந்தாள்  .... இசைக்கு அம்மா இல்லை.....என்ட  ஐயோ ..... என்ட  ஐயோ .... எங்களை  ஏன் சித்திரவதை செய்றாய் ?. நாங்கள்  யாருக்கு என்ன பாவம் செய்தம் .....தலையில் அடித்து  கத்தினாள்  மீனாட்சி .அடிக்கடி  அவள் இப்படி புலம்பிப் புலம்பியே உரு மாறிக்கொண்டு இருந்தாள் .அவள் மனதின் ஆசைகள் அண்ணன்  சுந்தரமூர்த்திக்கு தெரியும் 

.மழை தாழ்வாரத்தில்  குடையை சூழட்டியவளாய் '' மாமி ...,மாமி ....'' மழை  ஓயவிட்டு உங்களை அப்பா ஒருக்கா வந்திட்டுப் போகட்டாம். பட்டம் பூச்சியாய் சிறகடித்தாள்  பவித்திரா . 
''உள்ள வா பிள்ளை . இந்த  மழையில என்ன ?அவசரமாம் . '' அண்ணைக்கு  வயசு போயும் இன்னும்அவதிக் குணம்  போக இல்லை .நான் கத்தினது  ஏதும் கேட்டுட்டுதோ ....பேசப் போறார் போல ...
''சாப்பிட்டியா  பிள்ளை ....உள்ள வா .....'' அழுத கண்ணீரை  தோள்மூட்டு கையினால் தேய்த்து மூக்கை உறிஞ்சினால் மீனாட்சி .
 ''இசை ...படுத்திட்டாளா ..மாமி '' ?,  அவளை தொட்டு பார்த்தாள்  பவி .
இவள நேரம் மழையில விளையாடிட்டு தகப்பனி ட்ட பேச்சு வாங்கிட்டு  கிடக்கிறா .. அது வர வர கேக்கிற கேள்வியள் என்ன பிள்ளை ?. இப்ப உள்ள பிள்ளைகளின்ட அறிவோ?. சா .....அடம்பிடிப்பும்  கூடிப்போட்டுது......இசை பற்றி புராணம் வேறு  புளுகினாள்  மீனாட்சி . மீனாட்சியின் கனவெல்லாம் எப்படியும் பவியை  தன்னுடன் இழுத்துப் போடா வேண்டும் என்பது தான் .

 '' செல்லக் குட்டி...'' மாம்பழம் ... அவளை ஆசையுடன் கிள்ளிக் கொஞ்சினால் பவி . இரண்டு மணி ஆச்சு .....சாப்பிடாமலா ?
கோப்பி குடிச்சவள் , மழையில  விறகும் நனைஞ்சு எரியிது  இல்லை பிள்ளைஅடுப்பிலகஞ்சிஇருக்கு . எழும்ப சரி வரும் ....அடுப்படியில் நின்று என்ன இருக்கு என்று துழாவினால் பவி .பிள்ளைக்கான சாப்பாடு  எதுவும் இல்லை . கொஞ்ச அரிசி , வெங்காயம் , பாதி தேங்காய் என்று ஒரு சில மட்டுமே  குசினியின் அடையாளமாக இருந்தது . . 
அந்த நேரம் நெல்லு மூட்டை வைக்கவே இடம் இருக்காது என்ன மாமி ?. இப்ப குசினியில பூனை தான் ,...ம்ம்
தென்றல் இருந்திருந்தால் இப்ப எனக்கும் இவள் மாதிரி ஒருத்தி இருந்திருப்பாள் என்ன  .... மனம் எண்ணிக் கொள்ள   இசையை  ரசித்தால் பவி ...
.''மாமி.......'' ''மாமி  ...'' எனக்கு வெளிநாடு போக விருப்பம் இல்லை மாமி .  எங்காவது நல்ல வேலை
கிடைச்சால் அது காணும் எனக்கு . அப்பா தான் பயந்து பயந்து சாகிறார் . நீங்கள்தான் மாமி அவருக்கு விளக்கமாய் சொல்ல  வேணும் . வெளிநாடிலும் யார் தான் நின்மதியாய்  சந்தோசமாய் இருக்கினம் . எனக்கு அங்க என்ன தெரியும் மாமி ? அதுவும் அறிமுகம் இல்லாத எயன்சியோட ......ம்  ஆ .......நான் அடுத்த கிழமை வேலை தேடி கொழும்புக்கு போகப் போறான் ..

எதுக்கு கொழும்பில?.  அங்க என்ன எதுவோ தெரியாமா போயிட்டு .....என்ன வில்லங்கமோ ?

யாழ்ப்பாணம்  வவுனியா கிளிநொச்சி எண்டால்   இப்ப வேலை எடுக்கிறது கஷ்டம் .. அதுவும் எங்களப் போல இருக்கிறவை பாடு அவளவும் தான் .நானும்வாழத்தானே வேணும் . அப்பாடபென்சன் என்னத்தை காணும் .அண்ணா  நாங்கள் பார்ப்பம் எண்டு மாதம் மாதம் கொஞ்ச காசு அனுப்புவார் .
அவருமந்த குளிருக்க என்ன  கஷ்டப் படுராரோ யாருக்கு தெரியும் ?.எனக்கு தானே ஆண்டவனே எண்டு கால் கை இருக்கே. படிச்ச படிப்பும் இருக்கு.அப்பாவை கடைசி காலம் யாரை நம்பி நான்  விட்டு போறது ?. .. நான்   பிறகு யாருக்காக வாழ வேணும் மாமி ?. .....இப்பவே அநாதை மடத்தில சொல்லிவச்சிருக்கிறன் . எண்ட காலத்தில  அவர்களுக்கு  உதவியாய்  போயிடலாம்.

'''விசராடி உனக்கு?. படிச்ச பிள்ளையா நீ.... விசர்க் கதை கதையாதை ..அநாதை மடம் போகவா  உன்னை .........''' அவளைக்  கட்டி அனைத்து அழுதாள்  மீனாட்சி .
  வேற என்ன மாமி செய்யா?.
ஆசைப்பட்டு  கட்டினன் . எல்லாமே கனவு மாதிரி போயிட்டு .  சரி போகட்டும் இவளவு தான் நான் குடுத்து வைச்சது . இப்ப முப்பத்தி ஐந்து  வயது . பத்து வருஷம் நான் உழைச்சிட்டுஅதையும்கொண்டு  போயிட்டா நானும் கௌரவமாய் ....சாகலாம் மாமி
......... ம்ம்ம்ம்ம்  குளமான  கண்களை துடைக்கும் வேளையில்
''அம்மா?......எங்க?. ''ராகவன் குரல் கொடுத்தான்

வாறன் வாறன் .... தண்ணி அடுப்பில தான் இருக்கு . வாயால தான் கதைக்கிறம் ....

ம்ம்ம் ... கதை கண்டால் சரி ...

கோபப் படாதிங்க ரகு அண்ணா ........உங்களுக்கு இன்னும் தான் சுடுதண்ணிக் குணம்
விட்டுப் போகலையா?.

''ப....வி..................''துரத்தே அவள்  அப்பா கூப்பிடுவது கேட்டது .
வரட்டாம் போ .... இப்ப நீ போய்  பேச்சு வாங்கு கிண்டல் அடித்தான் ராகவன் .
குறும்புத் தனத்துடன் மாமியாரிடம்  விடை  பெற்று ஓடினால் பவி .
இளம் சூட்டு நீரினால் தனது கால்களுக்கு டெட்டொல்  போட்டு கால்களைக் கழுவித்
துடைக்க மழையும் ஓய்ந்தது .  கஞ்சியை குடித்து விட்டு  திண்ணையில் பாயைப்
போட்டு படுத்து விட்டான் ராகவன் .
சுந்தரமூர்த்தியிடம் போயிட்டு வந்த மீனாட்சிக்கு மனம் நிறைய குளிர்ந்தது   ஆனால்  உறுதிப் படுத்துவதில்  தடுமாற்றங்கள் அதிகம் . ....
நாட்கள் மாதங்கள் ஆக  ராகவன் வீட்டிற்கு ஆடிக்கும்  அமாவாசைக்கும் தலை நீட்டிய  பவித்திரா அடிக்கடி அவன்  வீடு வர ஆரம்பித்தாள் . 

அப்பா ......''அம்மா எங்கப்பா ?..... அம்மா  போட்டோ காணல .....
''பிள்ளைண்ட  அம்மா  வரப் போறா .....அப்புச் சாமி  பிள்ளையிட்ட அம்மா வை போக சொல்லி சொல்லிட்டாராம் ..'' . செல்லம் கொஞ்சினால்  மீனாட்சி 
அப்பா ... அம்மா உங்களைப் போல பேசுவாவா ?.   அடிப்பாவா? எனக்கு  நிறைய சொக்கிலேட் ... பிக்கா  எல்லாம் கொண்டு வருவாவா? நிறைய அச்சாச் சட்டை , சப்பாத்து ...மாலை எல்லாம் வாங்கிக் கொண்டு வருவாவா? எனக்கு குட்டி சயிக்கில் ...நிறைய போட்டு ....பென்சில் , ஐ போன் , எல்லாம் வாங்கி தருவா தானே ........

அப்புச் சாமி எல்லாம் அம்மாட்ட குடுத்து விடுவாரா அப்பா ......?
அம்மாட்ட சொல்லுவன்  ஒரே ஒரே நீங்கள் அடிக்கிறனிங்கள் ,  பேசிரணிங்கள் எண்டு  சொல்லுவான். உங்களுக்கு அடி வாங்கி தருவன் .
அவளை  இறுக  கட்டி அணைத்தபடி  படுக்கையில் சரிந்தான் ராகவன் . இசையாளுக்கு  அடிப்பது தொடக்கம் , பேசுவது , அவள் மீது கோபப் படுவது வரையும் நினைத்து நினைத்து அழுதான் ராகவன் , 

ராகவன் மாவீரன்  குடும்பம்  என்பதால் அவன் மீது நேசம்  அதிகம்  காவியாவுக்கு . காவியா மாணவர் படையணியில்  தன்னை ஆரம்பத்தில் இணைத்து பின்பு  தாயக சேவையில் தன்னை  அர்ப்பணித்து இருந்தாள் . பெண்கள்  அபிவிருத்தி குழுவின் தலைவியாகவும் அவள் இருந்தமையால்  வேலையின் நிமித்தம் ராகவனை சந்திக்க முடிந்தது . ராகவனும் பொறுப்பான வேலைகளில் இருந்தமையும் அவன் மீது காவியாவுக்கு ஈர்ப்பு அதிகமானது . இருவரின் பெற்றோர் சம்மதமின்றி  கிடைத்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்குரிய உறவுகளின் முன்னிலையில்  குடும்பமாகிக் கொண்டனர் . காவியா தன்னுடைய பணிக்காக சேவையில் நிற்கவும் . ராகவன் தன்னுடைய பணிக்காக சேவையில் நிற்கவுமே அவர்களின் காலங்கள்  அதிகமானது . ஆயிரம் தான் இருந்தாலும் ஆணாதிக்க மனநிலையில் இருந்து விடுப்பு பெறுவது என்னவோ  ராகவனால் இயலாத காரியமாகிப் போக . தன்னிலையில் நின்றும் மாறா தவளாக்கிப்  போனாள் காவியா. ஏட்டிக்குப் போட்டியாக இருவரும் நடந்து கொள்வதும் , விட்டுக் கொடுப்பின்மையும் இருவர் வாழ்க்கையையும் பாதிக்கவே செய்தது . அவள் மீது தீராத சந்தேகங்கள் ராகவனுக்கு  நீடித்திருந்தது . 

'' நான் உங்களைப்  புரிந்து கொள்ளாமல் தெரியாமல் ஆசைப் பட்டு விட்டேன் ரகு . அதுக்காக  இரண்டாம் கலியாணம்  நீங்கள் செய்தாலும் நான் செய்யப் போவதுமில்லை .என் படிப்பு எனக்கு சோறு போடும் ,நான் யாரிடமும் பிச்சை கேட்டுப் போக மாட்டன் .எனக்கு இனி வாழ வேண்டும்  என்ற விருப்போ ஆசையோ இல்லை ரகு . ஆனால் என் சாவு அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும் .என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஆரம்பத்திலே நீங்கள் சொல்லி இருந்தால் நான் உங்கள் சித்திரவதையை அனுபவிக்காமல் சந்தோசமாய் வாழ்ந்திருப்பேன் . என் தலை விதி அவளவு தான் . உங்கள் பணங்களை தின்றவள் என்ற வகையில் என்  உடல் கூசுகின்றது ரகு . என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் .  இன்னும் இரண்டு மாதத்தில் பிறக்கப் போகும் குழந்தையை பெற்று தந்து விட்டு நான்  போகின்றேன் . அதன் பின் எல்லா வழியிலும் நீங்கள் சந்தோசமாக இருங்கள் ..''..........என்று ஆத்திரத்தின் முடிவாக மட்டுமன்றி காலத்தின் தேவையாகவும்  களம் சென்றாள் காவியா. 

.''..கா ....வி ...யா ... என்னை மன்னிச்சுக் கொள்ளு ...காவி ...''

பெண் பாவம் என்னை சும்மா விடாது ...உண்மை தாண்டி ..காவி ...ஆஆஆஆஆ ...... பிள்ளையின்ட முகத்தை கூட ஒரு மாதம் தானே பார்த்தாய் ....அவள் அடிக்கடி   '' அம்மா எங்க ....அம்மா எங்க ''  என்று கேட்டு கேட்டு என்னை சாகடிக்கிறாள் ,,,காவியா ...

இங்க பார்...ஆ .....இங்க ....இரண்டு காலுமே ,முள்ளி வாய்க்காலில போட்டுது காவி ...போட்டுது ....ஒரு நேர சாப்பாட்டுக்கே வழி  இல்லாம  இப்ப  கஷ்டப் படுறன் .....பார்......என்ற காலைப் பார் ...கையைப் பார் எத்தினை காயம் பார் .....பார்....பார்...பார் ......ஆஆஆஆஆஅ    அழுதான் ராகவன் . 

தம்பி ...ரகு ...ரகு ...என்னய்யா ?.......
''   அம்மா ...அம்மா.....''   எண்ட  காவியா .......

 பிள்ளையை சரிச்சு படுக்க விடு ...எதுக்கு நெஞ்சிலையே விட்டனி...உனக்கு .ஏலாது எண்டு தெரியும் தானே ...கொஞ்ச  தண்ணி குடி ....இந்தா ... ..கனவே கண்டனி ?...அமைதியாய் படு .தம்பி. 

அவன் கனவு கண்டு போட்டான் போல . இனி பவியைப் பார்க்கிற நேரம் முழுக்கு கவியிண்ட நினைவும் வரும் தானே .வாழ வேண்டிய வயசில ......ம்ம்ம்  ஆண்டவன் தான் மன தைரியத்தையும் சந்தோசத்தையும் குடுக்க வேணும் ... தனக்குள் வேண்டினாள்  மீனாட்சி . 

''  ரகு ...என்னை விட்டிட்டு சந்தோசமாய் இருக்கிறிங்கள் தானே  என்ன ?. நான் அப்பா இல்லாதவள் , எனக்கு எண்ட அப்பா  கிடைச்ச   சந்தோசத்தில  உங்களை எப்பிடி எப்பிடி  எல்லாம் கனவு கண்டன்  தெரியுமா?  உங்கட மனசில  நான்  இருக்கிறேனா ரகு ....ரகு ....அப்பா ..அப்பா ....சொல்லுங்களன். '' ஹாஆ  ஹாஆ  ஹா  ....குலுங்கிக் குலுங்கி சிரித்தவளாய் .. குமுறலுடன் கேட்டாள் காவியா. 

'' காவியா ....காவியா... நீ .... எங்க ...இருக்கிறாய் ... இங்க வா ....ஓடாதை ..நில்லு .....நில்லு ... ''  அவசரமாக தனது பொய்க்கால் களை  பூட்டியும்  , பூட்டாமலும்   ஓட வெளிக்கிட  மீனாட்சியும் திடுக்கிட்டு எழும்பினாள் . 

'' அம்மா காவியா இருக்கிறாள் அம்மா .... அவள்   அந்தா... இப்ப வந்திட்டு ... மாமா வீட்டு கதவால ஓடுறாள் அம்மா ....'' ...அவள் என்னை விட்டிட்டுப் போராள் ... அம்மா ..............ஐயோ.... ஓஒஒ......'' அவள் தான் ... அவள் தா....ன் ...ம் ..

நீ கனக்கா ஜோசிக்கிறாய்   .... அவள் உன்னை ஆசீர்வதிச்சிட்டு போராள்  போல . முகத்தை கழுவிட்டு படு ......ரகுவின்  கடந்த கால எண்ணங்களை துடைக்க பவித்திராவால்  எப்படி முடியும் ?. பவித்திராவின் இழந்த  கனவுகளைக்க கலைக்க ரவியால் எப்படி முடியும் . ? 
இருந்தும் இருவருமே புரிந்து கொள்ளலின் அடிப்படையில் ..............

அப்பா ......  '' அம்மா ...எப்ப வருவா........ப்பா ........''   தேடலில் காத்திருக்கும் இசையாள் வீட்டில் பூபாள  இராகத்துடன் பட்டாம் பூச்சி  சிறகடிக்கத் தொடங்கியது .

முற்றும் 

யாழ் .தர்மினி பத்மநாதன் 

No comments:

Post a Comment