இலங்கை தீவின் தேர்தலும், ஈழத் தமிழரின் எதிர்காலமும்.
------------------------------ ------------------------------ ------------------------------ ------
வருகிற ஆகஸ்ட் 17 இல் இலங்கைத் தீவில் "நாடாளுமன்ற பொதுத் தேர்தல்" நடக்க இருக்கிறது. இது "அவசர,அவசரமாக" கொண்டுவரப்படும் தேர்தலாக இருந்தாலும், இதுதான் சில,பல, காரியங்களை தீர்ப்பதற்கு, இலங்கை மக்களால் எதிர்கொள்ளப்படும் தேர்தல். ஆகவே இந்த தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் கூட, "யாரைத் தேர்வு" செய்ய என்ற குழப்பம் உருவாகியுள்ளது. தென்னிலங்கையில் வசிக்கும் "சிங்களப் பெரும்பான்மை" மக்கள்தான் இந்த தேர்தலில் "தீர்மானிக்கும்" பாத்திரத்தை வகுப்பார்கள். அதாவது இத்தகு முன்பு நடந்த "அதிபர் தேர்தலில்" எப்படி தமிழ் மக்களது வாக்குகள் அதிபரின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலை இருந்ததோ, அதேபோல இந்த நாடாளுமன்ற தேர்தலில்,தென்னிலங்கையின் சிங்கள வாக்காளர்கள்தான் "தீர்மானகரமான" பங்களிப்பை செய்வார்கள் என்பதுதான் கணிப்பு. அதையே வேறு வார்த்தைகளில் கூறப்போனால், "சிங்களர்களுக்கு, அதிபர் தேர்தலில், தமிழர்கள் வாக்குகள் வேண்டும்: ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர்கள் வாக்குகள் வேண்டாம்".
இத்தகைய ஒரு சூழல்தான் இந்த தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் கூட இருந்தது. அனால் இப்போது அப்படி இல்லை என்பதுபோல தோன்றுகிறது.ஏன் என்றால், "சிங்கள வாக்குகளை அள்ள. மஹிந்த ராஜபக்சே களம் இறங்கிவிட்டார்". இது ரணில் விக்ரமசின்கேவிற்கும், அவரது "ஐக்கிய தேசிய கட்சி"கும் அதனுடன் கூட்டு சேர்ந்திருக்கும் "தமிழ், முஸ்லிம், மலையக" கட்சிகளுக்கும், ஒரு "சவாலாக" அமைந்துவிட்டது. அதன் விளைவு, "ஈழத் தமிழர்களது" வாக்குகள் இந்த தேர்தலிலும், "முக்கியமானதாக" உருவாகி உள்ளது. ஆனால் அது வேறு ஒரு வகையில்தான் செயல்படும். அதாவது தமிழர்களின் பகுதிகளில் இருந்து" தமிழ் பிரதிநிதிகளும்", முஸ்லிம்களின் வாழும் பகுதியிலிருந்து குறிப்பாக "கிழக்கு மாகாணத்திலிருந்து, தமிழ் பேசும் முஸ்லிம் பிரதிநிதிகளும்", மலையகத்திலிருந்து,"இந்திய வம்சாவளி பிரதிநிதிகளும்", சிங்களர் பகுதிகளிலிருந்து, "சிங்கள பிரதிநிதிகளும்" நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்களில் ஒவ்வொன்றிலும் "யார்,யார்" என்பதே இப்போது கேள்வியாகி விட்டது.
சிங்களப்பகுதிகளிலிருந்து அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற "மஹிந்த ராஜபக்சே" வகையாளர்கள் தேர்வு செய்யப்பட மட்டுமே அதிக வாய்ப்பு உள்ளது. கிழக்கு மாகாணத்திலிருந்து, "இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்" பிரதிநிதிகள் அதிகமாக் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அவர்களது சமூகம் மத்தியில் பெரும் எதிர்ப்பு கொடுக்க எந்த ஒரு பெரிய அமைப்பும் தெரியவில்லை. அவர்கள், ரணில் தலைமையிலான் "ஐக்கிய தேசிய கட்சி"யுடன் கூட்டணி கொண்டுள்ளனர். அதனால் தென்னிலங்கையில் குறைந்தாலும், ரணிலுக்கு கிழக்கு மகான முஸ்லிம் கட்சி மூலம் பிரதிநிதிகள் கிடைப்பார்கள். மலையக வாக்காளர்களிலும், ரணில் அணிக்கு மாறியுள்ள, ராஜபக்சே எதிர்ப்பு அரசியலுக்கு"தாவிவிட்ட" அல்லது ஏற்கனவே இருக்கின்ற "மனோ கணேசன்" போன்றவர்கள் இருப்பதால் அதுவும் ரணில் கட்சியின் கூட்டணிக்கு ஆதரவான பிரதிநிதிகளை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வாக்காளர்கள் நிலைமைதான் இன்னமும் தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளது. அதாவது இதுவரை, "ஒற்றுமையை காட்டவும், தமிழர் நலன்களை பிரதிபலிக்கவும்,"அசைக்க முடியாத நிலையில்" ஒவ்வொரு தேர்தல்களிலும் இருந்த "தமிழ் தேசிய கூட்டமைப்பு" இந்த முறை பழைய சாதகமான சூழலில் இல்லை. அதற்க்கு எதிராக, "கஜேந்திரகுமார்" தலைமையில் உள்ள "அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ", வித்யாதரன் தலைமையில் உள்ள :"முன்னாள் போராளிகள்" ஆகியோர் ஒருபுறமும், வடக்கு மாகான முதல்வர் விக்னேஸ்வரன் "தான் கூட்டணிக்கு தேர்தல் வேலை செய்யப்போவதில்லை" என்று கூறியுள்ள செய்தியும்,வாக்காளர்களை "மறு பரிசீலனைக்கு" சிந்திக்க வைக்கிறது.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்தும், வித்தியாசமான "கருத்துகள்: வருகின்றன. "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின், தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருதிரகுமார்" தனது அறிக்கையில், "சொல்லை மட்டுமல்ல, செயலையும் கவனித்து வாக்களியுங்கள்" என்று கூறியிருப்பதும், சிறிய அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்தும்.
விக்னேஸ்வரன் ஒருமுறை, சமீபத்தில், "நேரடியாக தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக" கூட்டணி பாடுபடும் என்றும்,"ரகசியமாக பேச்சுவார்த்தை" நடத்த வேண்டியது இல்லை என்றும் கூறியது யாருடைய செயலைப் பார்த்து என்ற கேள்வியும் கூட சிலாகிக்கப்படும். சுரேஷ் பிரேமச்சந்திரன், "இந்தியாவும், அமெரிக்காவும், தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக முயலவேண்டும்" என்று கூறியிருப்பதும் கூட, தேர்ததலில் "கூட்டணியை" ஆதரித்து பணியாற்ற வெளிநாட்டு சக்திகளையும் கூட "கணக்கில்" எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஏன் என்றால் "சீனாவின் ஆதரவை" பெற்றுதான் மகிந்தா களம் காண்கிறார் எனபதே பேச்சு. ஆகவே தமழர்கள் தங்களுக்காக வாதாடும் பிரதிநிதிகளை "கட்சிகளை தாண்டியும் கூட" தேர்வு செய்யக் கூடிய தேவை எழுந்துள்ளது. எப்படியோ "வலுவான தமிழர்களின் பிரதிநிதிகள்" தேர்வு எனபதை தமிழ் வாக்காளர்கள் உணரவே செய்கின்றனர்.
tss .மணி
பத்திரிகையாளர்
தமிழ்நாடு.
No comments:
Post a Comment